பொள்ளாச்சி: கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை டாக்டர்களுக்கு, 24 ஆண்டுகள் கழித்த பின்னரே, பதவி உயர்வு கிடைப்பதால், காலமுறை பதவி உயர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், கால்நடைத்துறை வாயிலாக, கால்நடைகளில் நோய்த் தடுப்பு, நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை, இனப்பெருக்க மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு, தொழில் முனைவோர் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில், 90 கால்நடை உதவி டாக்டர்கள், 18 கால்நடை டாக்டர்கள் பணியில் உள்ளனர். பி.வி.எஸ்சி., படித்து கால்நடைத்துறையில் உதவி டாக்டராக பணியில் சேரும் இவர்கள், 24 ஆண்டுகள் வரை காத்திருந்த பின்னரே, பதவி உயர்வு பெறுகின்றனர். இதனால், டி.ஏ.சி.பி., என்ற மாவட்ட நியமனம் மற்றும் பதவி உயர்வு குழு அமைத்து, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை பதவி உயர்வு வழங்கும் முறையைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடை துறையினர் கூறியதாவது: கால்நடை உதவி டாக்டர்களாக பணியில் சேர்ந்தவர்கள், 24 முதல் 25 ஆண்டுகளை கடந்த பின்னரே கால்நடை உதவி இயக்குநர் எனும் முதல்நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்பின் ஓய்வு பெறும் வரை அடுத்த பதவி உயர்வு கிடைக்குமா என காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த முறையை தவிர்க்கும் வகையில், கடந்த, 2011ல், டி.ஏ.சி.பி., எனப்படும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை பதவி உயர்வு எனும் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, பணியில் சேர்ந்த 8, 16, 20, 24 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டது. அரசாணை பிறப்பிக்கப்பட்டும், மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, வரை பதவி உயர்வுக்காக கால்நடை டாக்டர்கள் காத்திருக்கின்றனர். டி.ஏ.சி.பி., எனும் காலமுறை பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. அரசே முன்வந்து, டி.ஏ.சி.பி., முறையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு, கூறினர்.
டாக்டர்கள் நம்பிக்கை!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கால்நடை டாக்டர்களுக்கு பதவி உயர்வு பெற்றுத் தரும் நோக்கில் அரசியல் கட்சியினர் இடைத்தரகர்களாகவும் செயல்பட்டனர். அதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை அறிந்த கால்நடை டாக்டர்கள், அதில் இருந்து பின்வாங்கினர். தற்போது, அரசியல் கட்சியினரின் தலையீடு இல்லாததால் நிம்மதியாக உள்ளதென கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், காலமுறை பதவி உயர்வு வழங்கினால், மற்ற துறையினரை போன்று கால்நடைத்துறையிலும் பதவி உயர்வு கிடைக்கும் என்கின்றனர் கால்நடை டாக்டர்கள்.