உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் 27 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் துாள்

கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் 27 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் துாள்

கோவை ; கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில், 50 ஆண்டுகளாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கட்டடங்கள், நேற்று மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால் இடித்து அகற்றப்பட்டன.கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட, கரும்புக்கடை சாரமேடு பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன. ரோட்டின் அகலம், 15 அடியாக சுருங்கி இருந்ததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மாநகராாட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அப்பகுதியில் கள ஆய்வு செய்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக, ரோட்டை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து, மூன்று கட்டங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவிட்டார்.அதன்படி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், ரோட்டின் இருபுறமும், 660 அடி நீளத்துக்கு ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த, 27 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், ரோட்டின் அகலம் 45 அடியில் இருந்து, 50 அடியாக இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த ரோடு பொள்ளாச்சி ரோட்டையும், நஞ்சுண்டாபுரம் ரோட்டையும் இணைக்கும் முக்கியமான பகுதியாக அமைகிறது. உடனடியாக, இரண்டாம் கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்க, நகரமைப்பு பிரிவினருக்கு கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ