| ADDED : செப் 25, 2011 01:19 AM
அன்னூர் :தமிழக அரசு சார்பில், கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டு, கோவை உள்பட நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் மூலம் வீடுகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அன்னூரில் செயல்பட்டு வந்த தனியார் கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் நேற்று மாலை ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. ஆபரேட்டர்கள் சங்க பிரதிநிதிகள் புருசோத்தமன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:அரசு கேபிள் 'டிவி'க்கு ஆபரேட்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆபரேட்டர்களின் நலன் பாதுகாக்கப்படும். சில கட்டண சேனல்கள் இப்போது ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ் கட்டண சேனல்களுடன் நான்கு சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த சேனல்களும் ஒளிபரப்பாகும்.ஆபரேட்டர்கள் தங்களிடம் உள்ள இணைப்புகளுக்கு தலா 60 ரூபாய் வீதம் அரசுக்கு 'டெபாசிட்' தொகையாக செலுத்த வேண்டும். இது குறித்து அரசிடமிருந்து இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும். தாலுகா அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஆபரேட்டர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் பேசினார்.ஆபரேட்டர்கள் கூறுகையில்,''கேபிள் ஒளிபரப்பில் மின் கட்டணம், தொழிலாளர் சம்பளம் அதிகமாக உள்ளதால், ஒரு இணைப்புக்கு 50 ரூபாய் கிடைப்பது போதுமானதாக இல்லை. இதை உயர்த்தி தர வேண்டும்,'' என்றனர்.