உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்லடம் 3 பேர் கொலை வழக்கு: 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு: 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் தெய்வசிகாமணி, 78. அவர் மனைவி அலமேலு, 75. கடந்தாண்டு நவ., மாதம் அவர்களைப் பார்ப்பதற்காக கோவையில் வசித்து வந்த தம்பதியின் மகன் செந்தில்குமார், 46 வந்திருந்தார்.இந்நிலையில் நவ. 28ம் தேதி மூன்று பேரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அலமேலு அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது. இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தமிழகத்தின் பல இடங்களிலும் இது போன்ற கொலை சம்பவங்கள் நடந்த நிலையில், இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நான்கு மாத காலம்இம்மியளவு கூட முன்னேற்றம் ஏற் படவில்லை. அரசியல் கட்சியினர், அமைப்பினர் என பலரும் போராட்டங்கள் நடத்தினர். இது குறித்து விசாரிக்க டி.ஐ.ஜி., தலைமையில், எஸ்.பி., கண்காணிப்பில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும், நுாற்றுக்கணக்கானோரிடம் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அவர்களும் பல்வேறு கோணங்களில் இது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே ராமசாமி, 74; பாக்கியம், 64 தம்பதியினர் தனியாக வசித்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளை போனது. கடந்த மார்ச் மாதம் இந்த சம்பவம் நடந்தது. இது குறித்த விசாரணையில் இதில் ஈடுபட்ட ரமேஷ், ஆச்சியப்பன், மாதேஸ்வரன் ஆகிய மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மேலும், இதில் தொடர்புடைய நகை கடைக்காரர் ஞானசேகரனும் பிடிபட்டார். போலீஸ் விசாரணையில் இந்த கும்பல் தான் பல்லடம் சம்பவத்திலும் ஈடுபட்டது தெரிந்தது.இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த நபர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அதனடிப்படையில், தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை நேற்று திருப்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. டி.எஸ்.பி., சந்திரசேகர், 3440 பக்கங்கள் கொண்ட இறுதி குற்றப் பத்திரிகையை நேற்று திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் மோகனவள்ளி முன்னிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த கொலை கடந்தாண்டு நவ. 28ம் தேதி நடந்தது. ஓராண்டு நிறைவடையும் நிலையில் தற்போது கோர்ட்டில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை