முதல்ல சினிமாவில் சாதனை அரசியலில் சாதிப்பது அப்புறம்
போத்தனூர் : ''சினிமாவில் சாதிக்க வேண்டியது, இன்னும் உள்ளதால் அரசியல் குறித்து பின்னர் பார்க்கலாம் ''என நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். கோவை சுகுணாபுரத்திலுள்ள, கிருஷ்ணா கல்லூரி அரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். அமரன் பட காட்சிகள், பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. மாணவர்களின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ராணுவ உடையை கடைசியாக போட்ட பின், அதனைவீட்டிற்கு கொண்டு போய் விட்டேன். அந்த உடை யை விட,முகுந்த் எனும் பெயர்தான் மிகவும் பிடித்தது. இப்படத்தில் நடிக்க மனம், உடல் ரீதியாக தயாரானேன். முகுந்த் பணி செய்த இடத்தில் ஷூட்டிங் நடந்தது. ஒரு சிலருக்கு அடிபட்டது,'' என்றார். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் அவருடன் புகைப்படம், செல்பி எடுத்தனர். பின், பத்திரிகையாளர்களிடம் சிவகார்த்திகேயன் பேசுகையில், ''சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் நிறைய உள்ளது. அரசியலை பற்றி பின்னர் பார்ப்போம்,'' என்றார்.