| ADDED : பிப் 12, 2024 12:36 AM
அன்னுார்:அன்னுார் பேரூராட்சியின் 'கறார்' செயல் அலுவலர் 30 ஆண்டுகளில் 42வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மயிலாடுதுறையை சேர்ந்தவர் மோகனரங்கன், 55. அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலராக மோகனரங்கன் கடந்த 2022 டிச., 23ம் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஊழியர்கள் கூறியதாவது: மோகனரங்கன் இதுவரை 30 ஆண்டுகளில், 12 மாவட்டங்களில், 42 பேரூராட்சிகளில் பணிபுரிந்துள்ளார். கட்டி முடிக்கப்பட்ட வீடு என்றால் நேரடியாக ஆய்வு செய்த பின்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குவார். லே- அவுட்டுகளில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி இருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிப்பார். இதனால் இவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் இவரால் பாதிக்கப்பட்டோர், உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் கொடுத்து இவரை வேறு பேரூராட்சிக்கு மாற்றுகின்றனர். அதிகபட்சமாக எந்த பேரூராட்சியிலும் ஒன்றரை ஆண்டுக்கு மேல் இவர் பணிபுரிந்ததில்லை. பேரூராட்சிகளின் சட்ட விதிகள், அரசாணைகள் அத்தனையும் இவருக்கு அத்துபடி. பேரூராட்சிகளின் இயக்குனரகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கூட ஏதாவது நிர்வாக நடைமுறைகளில் சந்தேகம் இருந்தால் இவரிடம் தான் ஆலோசிப்பது வழக்கம். இதற்கு முன்பு தாளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்தார். எந்த பேரூராட்சியில் பணிபுரிந்தாலும், நூறு சதவீதம் விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மட்டுமே அனுமதி அளிப்பார். அனைத்து செலவுகளையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே காசோலையில் கையெழுத்திடுவார். அன்னுார் பேரூராட்சியில் ஊழியர்கள் அதிகமாக இருப்பதாக கூறி 15 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இவ்வாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.
அரசியல் அழுத்தம்
முன்பு ஒரு பேரூராட்சியில் ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகியின் 'லே-அவுட்'டுக்கு அனுமதி தர மறுத்ததால் மாற்றப்பட்டார். மற்றொரு பேரூராட்சியில் நேர்காணலுக்கு வராதவருக்கு பணி உத்தரவு வழங்கும் படி கூறிய எம்.எல்.ஏ.,வின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததால் மாற்றப்பட்டார். இப்படி அரசியல் அழுத்தம் காரணமாக செயல் அலுவலர் மோகனரங்கன் பல முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.