உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம்; காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு 

விபத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம்; காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு 

கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மோதிராபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,55; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கணபதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 50 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு பாலிசி எடுத்து இருந்தார். இந்நிலையில், கடந்த 2022, ஜூன், 28ல், பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்குடன் மோதியதில் படுகாயமடைந்த செல்வகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் விபத்து காப்பீட்டு தொகை வழங்க கோரி, அவரது மனைவி தெய்வநாயகி மற்றும் இரு மகள்கள், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால், செல்வகுமார் மதுபோதையில் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டதாக கூறி, இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது.பாதிக்கப்பட்ட செல்வகுமாரின் குடும்பத்தினர், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு: செல்வகுமார் விபத்தில் சிக்கி இறப்பதற்கு, மதுபோதை தான் காரணம் என்பதற்கான மருத்துவ ஆவணங்கள், எதிர்மனுதாரர்கள் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. விபத்துக்குள்ளானவர் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தெரியவருகிறது. இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதியாகியுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு விபத்து காப்பீட்டு தொகை, 50 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை