544 மனுக்கள்; 71க்கு உடனடியாக தீர்வு
கோவை: 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு திட்டத்தில், கோவையில் நேற்று நடத்திய முதல் முகாமில், 544 மனுக்கள் பெறப்பட்டன. உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டதில், 71 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.கோவை மாநகராட்சியின் சேவையை மக்களைத் தேடிச் சென்று அளிக்கும் வகையில், முதல்கட்டமாக, கிழக்கு மண்டலம், 53வது வார்டில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.துணை மேயர் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் துறை தலைவர்கள் அனைவரும் முகாமிட்டனர்.கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். சொத்து வரி புத்தகம், பிறப்பு சான்றிதழ் கோருதல், வரைபட அனுமதி, டி.எஸ்.எல்.ஆர்., நகல் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மொத்தம், 544 மனுக்கள் பெறப்பட்டன.71 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதற்கான உத்தரவு நகல்களை, விண்ணப்பதாரர்களிடம் கமிஷனர் வழங்கினார். மீதமுள்ள, 473 மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு காண, மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.