ரூ.1.24 கோடியில் 8 அங்கன்வாடி மையங்கள்
கோவை; கோவை மாவட்டத்தில், 1,444 அங்கன்வாடி மையங்கள், 196 குறு அங்கன்வாடி மையங்கள் என, 1,640 மையங்கள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் மட்டும், 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான கட்டடங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ்(ஐ.சி.டி.எஸ்.,) அங்கன்வாடி மைங்கள் பராமரிக்கப்படுகின்றன. அதேசமயம், எம்.எல்.ஏ., எம்.பி., நிதிகளில் இந்த அங்கன்வாடி கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன.ஆபத்தான சூழலில் அங்கன்வாடி மையங்கள் இருப்பது குறித்து நமது நாளிதழில் புகைப்படத்துடன்கூடிய செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் எட்டு இடங்களில் புதிதாக அங்கன்வாடி மையங்கள் அமைக்க மாமன்ற அவசர கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி, மேற்கு மண்டலம், 43வது வார்டு வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கூடுதல் பணிகள், சுற்றுச்சுவர் ரூ.9.80 லட்சம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்படுகிறது.கிழக்கு மண்டலம், 61வது வார்டு கள்ளிமடை பகுதியில் புதிதாக இரு அங்கன்வாடி மையங்கள் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிதாக ரூ.15 லட்சம் மிதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது.மேலும், 77வது வார்டு ஹவுசிங் யூனிட் நான்காவது வீதியிலும், 78வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு ஹவுசிங் யூனிட், தென்வடல் வீதியிலும், 79வது வார்டு முத்துசாமி காலனியிலும், 97வது வார்டு, கே.வி.கே., நகரில் மாநகராட்சி பள்ளி வளாகத்திலும் பழுதடைந்த மையங்களை இடித்துவிட்டு தலா ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படுவதால் குழந்தைகள், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.