உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  9 கி.மீ. குழாய் பதித்து 54,000 இணைப்பு தர வேண்டும் 24 மணி நேர குடிநீர் திட்டம் ஜனவரிக்குள் முடியுமா?

 9 கி.மீ. குழாய் பதித்து 54,000 இணைப்பு தர வேண்டும் 24 மணி நேர குடிநீர் திட்டம் ஜனவரிக்குள் முடியுமா?

காந்திபுரம்: கோவை மாநகராட்சி 60 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதித்து இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேல்நிலை தொட்டிகள் கட்டுவது, தொட்டிகளுக்கு இணைப்பு கொடுப்பது, பிரதான குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகள் சில இடங்களில் நிலுவையில் இருக்கின்றன. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், புதிதாக குடிநீர் தொட்டி கட்டியுள்ள இடங்களில் நேற்று ஆய்வு செய்தார். மொத்தம் 33 இடங்களில் தொட்டி கட்ட வேண்டும். குப்பகோனாம்புதுார் சின்னம்மாள் வீதி, ரத்தினபுரி, வ.உ.சி. பூங்கா ஆகிய இடங்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது. ஸ்ரேயா கார்டன், காந்தி மாநகர் காவலர் குடியிருப்பு, பாரதி பார்க், அலமேலு நகர், ஸ்ரீலட்சுமி நகர், குறிஞ்சி கார்டன் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளுக்கு, பிரதான குழாயில் இருந்து இணைப்பு வழங்கி, தண்ணீரை ஏற்றி, பரீட்சார்த்த முறையில் சப்ளையை துவக்க வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து முடிக்க சூயஸ் நிறுவனத்தினருக்கு கமிஷனர் அறிவுறுத்தினார். மொத்தம் 75 கி.மீ. துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டும்; 66.25 கி.மீ. துாரத்துக்கு முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.5 லட்சம் இணைப்பு வழங்க வேண்டும்; 95,947 இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. நிலுவை பணிகள் அனைத்தையும், 2026 ஜன., இறுதிக்குள் முடித்து, அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என அதிகாரிகளுக்கு கமிஷனர் அறிவுறுத்தினார். ''ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து திருச்சி ரோட்டில் லங்கா கார்னர் அருகே அரசு மருத்துவமனை முன் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. திருச்சி ரோட்டில் சுங்கம் சந்திப்பு பகுதியை கடந்து சிவராம் நகருக்கு குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதிக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலன்
டிச 19, 2025 06:15

சிங்காநல்லூர் வார்டு 60 ல் மேல் நிலை தொட்டி கட்டி பல மாதங்கள் ஆயிற்று.ஆனால் இது வரை தண்ணீர் வரவில்லை.


சமீபத்திய செய்தி