பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டம், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இத்தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.பிளஸ் 1 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம், 4ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடைபெற்றது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 37 மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று காலை, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அரசுப்பள்ளிகள்
கல்வி மாவட்டத்தில் உள்ள, 36 அரசுப்பள்ளிகளில், 1,397 மாணவர்கள், 1,876 மாணவியர் என மொத்தம், 3,273 பேர் தேர்வு எழுதினர். அதில், 1,165 மாணவர்கள், 1,769 மாணவியர், என, மொத்தம், 2,934 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 83 சதவீதம், மாணவியர், 94 என மொத்தம், அரசுப்பள்ளி, 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. நகராட்சி பள்ளிகள்
நகராட்சியில் உள்ள பள்ளிகளில், 152 மாணவர்கள், 188 மாணவியர் என, மொத்தம், 340 பேர் தேர்வு எழுதினர். அதில், 133 மாணவர்கள், 167 மாணவியர் என மொத்தம், 300 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 88 சதவீதம், மாணவியர், 89 சதவீதம் என மொத்தம், 88 சதவீதம் நகராட்சி பள்ளிகள் தேர்ச்சி பெற்றன. உதவி பெறும் பள்ளிகள்
அரசு உதவி பெறும் பள்ளிகளில், 274 மாணவர்கள், 625 மாணவியர் என, மொத்தம், 899 பேர் தேர்வு எழுதினர். அதில், 262 மாணவர்கள், 618 மாணவியர் என, மொத்தம், 880 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 96, மாணவியர், 99 சதவீதம் என, உதவி பெறும் பள்ளிகள், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மெட்ரிக் பள்ளிகள்
கல்வி மாவட்டத்தில் உள்ள, 50 மெட்ரிக் பள்ளிகளில், 1,928 மாணவர்கள், 1,586 மாணவியர் என, மொத்தம், 3,514 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள், 1,878, மாணவியர், 1,580 என, மொத்தம், 3,458 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கல்வி மாவட்டத்தில்...
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்கள், 3,438 பேர், மாணவியர், 4,134 பேர் என, மொத்தம், 7,572 பேர் தேர்வு எழுதினர். அதில், மாணவர்கள், 313; மாணவியர், 141 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர்கள் - 92; மாணவியர் - 97 என, மொத்தம், 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 போன்று, பிளஸ்1 பொதுத்தேர்விலும், மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி சதவீதமே அதிகரித்து காணப்பட்டது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 1 தேர்வில், 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளோம்.பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகள், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பயற்சி வழங்கியதால், நல்ல தேர்ச்சி சதவீதம் கிடைத்துள்ளது,' என்றனர்.
இதையும் ஆராய வேண்டும்!
நகராட்சியில் உள்ள மூன்று பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 70 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில், 88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. நகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணத்தை கண்டறிந்து சீரமைத்தால் மட்டுமே, கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.தனியார் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் படித்தாலும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் சூழலில், அரசுப்பள்ளிகளில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
36ல் ஒரு பள்ளி தான் 'சென்டம்'
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்கள் உள்ளன.கல்வி மாவட்டமானது, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 96 சதவீதமும்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 92 சதவீதமும்; பிளஸ் 1 பொதுத்தேர்வில், 94 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 36 அரசுப்பள்ளிகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் அட்டக்கட்டி அரசுப்பள்ளி மட்டுமே, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மற்ற பள்ளிகளில், 70 - 98 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக, சோலையாறு அணை அரசுப்பள்ளி, 62.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.