உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தானா வளர்ந்த நகரம்; வழிகாட்டலில் எட்டுது சிகரம்

தானா வளர்ந்த நகரம்; வழிகாட்டலில் எட்டுது சிகரம்

இ ந்திய தொழில்நகரங்களில் கோவைக்கு என பிரத்யேகமான அம்சம் ஒன்று உண்டு. அது, அரசின் திட்டமிட்ட உருவாக்கங்கள், உதவிகள் ஏதுமின்றி, தானாக, இங்குள்ள மக்களின் தன்முனைப்பில் வளர்ந்த நகரம் என்பதே. தற்போது அரசின் உதவிக் கரமும் 'கைடன்ஸ் தமிழ்நாடு' வழியாக சற்று நீண்டிருக்கிறது. இது தொடருமானால், கோவை விரைவிலேயே அதன் மிச்சமிருக்கும் உச்சபட்ச திறன்களையும் பயன்படுத்தி சிகரத்தை எட்டும். கோவையின் தொழிற்சூழல் 360 கோணத்தைக் கொண்டது. திறன்மிகு தொழில்முனைவு, சுகாதாரம், கல்வி என அனைத்துத் தளங்களிலும் பரந்த அனுபவமும் புத்தாக்கமும் கோவைக்கு உண்டு. மைசூர், விசாகப்பட்டினம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களைக் காட்டிலும் கோவை, பல்வேறு துறைகளிலும் தொழில்முனைவைக் கொண்டுள்ளது. கோவையின் ஏற்றுமதி ரூ. 45 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில் ஐ.டி., துறையின் பங்களிப்பு ரூ. 15 ஆயிரம் கோடி. ஐ.டி., துறையில் 1990களில் பெங்களூரு, 2000களில் ஹைதராபாத் இருந்த நிலையை, கோவை தற்போது எட்டியுள்ளது. இங்கிருந்து ஐ.டி., பணிக்கு வெளி நகரங்களுக்குச் சென்றநிலை மாறிவருகிறது. தொழில் வளர்ச்சியில் அரசின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. சூலூர் அருகே செமி கண்டக்டர் தொழிற்சாலை, பன்னடுக்கு லாஜிஸ்டிக் பார்க், கோவையில் ஜுவல் பார்க் போன்ற அறிவிப்புகள், 1 கோடி சதுர அடிக்கும் அதிகமான அலுவலக பணிப்பரப்பு, இன்குபேஷன் மையங்கள், தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள், ஸ்டார்ட்அப் டிஎன் போன்றவை கோவையின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வருகின்றன. தமிழக அரசின் 'கைடன்ஸ் தமிழ்நாடு', தொழில் முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. புதிய நிறுவனங்களோ, வேறு நிறுவனங்களோ கோவையில் தொழில் துவங்க விரும்பினால், சரியான இடத்தைத் தேர்வு செய்ய உதவுவது, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துவங்க அனுமதி, பணியாட்களைத் தேர்வு செய்ய உதவுதல், போக்குவரத்து, நிதி, வர்த்தக வாய்ப்புகள் என அனைத்து விதமான வழிகாட்டல்களையும் கைடன்ஸ் தமிழ்நாடு வழங்குகிறது. பல்வேறு அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் இருந்து பெற்றுத் தருவது போன்ற அணுகல்கள் தொழில் துவங்குவதை எளிமைப்படுத்துகின்றன. இதனால், தொழில்நிறுவனங்களின் வருகை மற்றும் முதலீடு அதிகரித்துள்ளது. கோவை மட்டுமின்றி, புறநகர்களிலும் தொழில் விரிவடைகிறது. அரசின் உதவி, வழிகாட்டல் போன்றவற்றால் பொள்ளாச்சியில் எலெக்ட்ரானிக் சார்ந்த பெருநிறுவனம் விரைவில் வரவுள்ளது. தானாக வளர்ந்த நகரம் என்ற பெருமை கொண்ட கோவைக்கு அரசின் உதவிக்கரம் நீளும்பட்சத்தில், அது சிகரத்தை எட்டும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி