| ADDED : ஜன 15, 2024 10:19 PM
வால்பாறை:வால்பாறையில் குளுகுளு சீசன் நிலவும் நிலையில், பொங்கல் விடுமுறையில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை புரிந்தனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறையில் வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்தனர். சுற்றுலா பயணியர் வருகையால், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள காட்சி முனை பகுதி, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.சுற்றுலா பயணியர் ஆழியாறு வழியாக வால்பாறை வரும் மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால்குரங்குகள், யானைகள், காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் கண்டு ரசித்தனர். சமவெளிப்பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் ரம்யமான சிதோஷ்ணநிலை நிலவுவதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.