சண்டே அவுட்டிங் பிளான் போட்டாச்சா... இந்த வாரம் கொஞ்சம் மலர்களின் வாசத்தில் நனைந்திட, பிள்ளைகளை அழைத்து செல்லுங்கள். நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம், வேளாண் பல்கலை. அங்கு கடந்த இரண்டு தினங்களாக மலர் கண்காட்சி, பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது.லட்சக்கணக்கான மலர்களால் உருவாகியுள்ள கண்காட்சியில், நிலவில் இறங்கியுள்ள சந்திரயான், செஸ் போர்டு மலர் அலங்காரம், காய்கறியை போன்ற மலர் அலங்காரம், வாடிவாசலில் காளையை அடக்கும் வீரர்....இப்படி எத்தனையோ. அத்தனையும் வண்ண வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.தவிர, போன்சாய் மரங்கள், பல்கலை மாணவிகளின் மலர் மற்றும் பழ சிற்பங்கள், காட்சிக்கு உள்ளன. நம் வீட்டு பெண்மணிகளை ஈர்க்கும், முக்கிய இடம் நர்சரிதான். பல்கலையின் சார்பில், செடிகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. மல்லி, செண்டு மல்லி, நட்சத்திர மல்லி, பன்னீர் ரோஸ், முள் சீதா, செவ்வந்தி என மலர், மரம், வீட்டின் உள் அலங்கார செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஷாப்பிங் அரங்கம், உணவு அரங்கம் என பொழுதை போக்க ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. காலை, மாலை வேளைகளில் நடன நிகழ்வுகள், கலாசார நிகழ்வுகளும் நடைபெறும். வழக்கமாக சினிமா தியேட்டர்கள், மால்கள் சென்று வார விடுமுறையை கழிக்கும் குழந்தைகளுக்கு, இந்த மலர் கண்காட்சி புது அனுபவமாக இருக்கும். ஆகவே, மால்கள் பட்டியலுடன் இன்றைய விடுமுறை நாளை கழிக்க, மலர் கண்காட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.குழந்தைகளுடன் செல்பவர்கள் நிறைய தண்ணீர் கொண்டு செல்ல மறக்காதீர்கள்.