பெற்றோர் பணிபுரியும் நிறுவனத்துக்கே கடிதம் அனுப்பி வரவழைத்த அரசுப்பள்ளி!
கோவை: கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்நடைபெற்றது. தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் தவறாமல் நடைபெறுவதும், அதில் பெரும்பாலான பெற்றோர்கள் கலந்துகொள்வதும் வாடிக்கை. ஆனால், அரசு பள்ளிகளில் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்வதும், அதில் பெற்றோர்களைப் பங்கேற்க வைப்பதும் சவால்தான். தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலை, பள்ளியில் அவர்களின் நடத்தை, மற்றும் ஆசிரியர்களுடனான உறவு ஆகியவற்றை பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம். இருப்பினும், அரசுப்பள்ளி மாணவர்கள் பலரின் பெற்றோர், இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், கண்ணம்பாளையம் அரசு பள்ளி நிர்வாகம் அப்படியில்லை. வேற லெவல். பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பணிபுரியும் நிறுவனங்களுக்கே, கடிதம் அனுப்பியது. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், பெற்றோர் திரளாக பங்கேற்றனர். இந்த சந்திப்பு கூட்டத்தில், மாணவர்களின் காலாண்டு தேர்வின் வினாத்தாள்கள் பெற்றோரிடம் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முயற்சிக்கு நல்ல பலன் பெற்றோர் பணிபுரியும் நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில், 'தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் (பெற்றோர்) இந்த முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, அவருக்கு 1 மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தோம். எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த சந்திப்பில், 60 பெற்றோர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். - செந்தூரன் தலைமை ஆசிரியர்.
பிற பள்ளிகளும்
பின்பற்றலாம்
ஒரு அரசுப்பள்ளியால், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை இப்படி வெற்றிகரமாக நடத்த முடியும் என்றால், பிற அரசுப்பள்ளிகளாலும் முடியும்தான். நடத்திக்காட்டுவார்களா தலைமை ஆசிரியர்கள்? அவ்வாறு நடத்தி செய்தி, படம் அனுப்பினால், பிரசுரிக்கத் தயாராக உள்ளது தினமலர்.