மேலும் செய்திகள்
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 3,500 ரூபாய் போனஸ்
18-Oct-2025
கோவை: மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களில் வெறும் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுவதுடன், மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கப்படாததால் நோய்கள் குறித்து அறியாமல் துாய்மை பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். கோவை மாநகராட்சியில், 4,652 ஒப்பந்த பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட சிறப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மழை, வெயில் பாராமல் வார்டுகளில் சுகாதாரம் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுகின்றனர். குப்பை கழிவுகளை கையாளும் இவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்தப்படும் முகாம்களில் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. நோய் பரிசோதனை முடிவுகள் அடங்கிய மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கப்படாதால் சரியான சிகிச்சை எடுக்க முடியாமல் பாதிப்புகளை சந்திப்பதாகவும் துாய்மை பணியாளர்கள் குமுறுகின்றனர். முழு உடல் பரிசோதனை! துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் தலைவலி, சளி, இருமலுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மட்டுமே வழங்குகின்றனர். வெயில் காலத்தில் குப்பையில் இருந்து மந்த வாயுக்கள் அதிகம் வெளிவருகின்றன. துர்நாற்றத்துக்கு மத்தியில் வேலை செய்யும் எங்களுக்கு மூச்சுத்திணறல் அதிகம் ஏற்படுகிறது. இப்படியிருக்க தீவிர நோய் பாதிப்புகள் குறித்து அறிய ரத்த பரிசோதனை அவசியம். மருத்துவர்கள், நர்சுகளிடம் நாங்கள் கூறினால் முதலில் மாத்திரை சாப்பிடலாம், அதன் பிறகும் சரியாகவில்லையேல் மேல் சிகிச்சை எடுக்கலாம் என்கின்றனர். ஆனால், பணி காரணமாக உடல் நலத்தின்மீது கவனம் செலுத்த முடிவதில்லை. நோய் பாதிப்பே தெரியாமல் இளம் வயதினர், பெண்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவ முகாம்களை மாதம் தோறும் நடத்துவதுடன், பரிசோதனை அறிக்கையை எங்களுக்கு வழங்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையும் மேற்கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர். வழங்குகிறோம்!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது,''துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கப்படுகிறது. முகாம்களில் அறிக்கை கிடைக்காதவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.
18-Oct-2025