உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க... திட்டம் தேவை! சிறப்பு குழுவால் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க... திட்டம் தேவை! சிறப்பு குழுவால் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

உடுமலை: நிலத்தடி நீர் ஆதாரமாகவும், மீன் வளம் மிக்க, ஏழு குள பாசன திட்ட குளங்களில், கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பாசன விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.உடுமலை அருகே திருமூர்த்திமலையில் இருந்து அடுக்குத்தொடராக, அமைந்துள்ள குளங்கள், ஏழு குள பாசனத்திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது.இக்குளங்களுக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து, அரசாணை அடிப்படையில், தளி வாய்க்காலில் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில்,பெரியகுளம், -404 ஏக்கர், செங்குளம்-, 74.84 ஏக்கர், செட்டிக்குளம், -67.49 ஏக்கர், தினைக்குளம், -51.19 ஏக்கர் நீர்த்தேக்க பரப்பை கொண்டுள்ளன. இக்குளங்களின் வாயிலாக நேரடி பாசனத்தில், 2,500 ஆயிரம் ஏக்கர் வரையும், பல ஆயிரம் ஏக்கருக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.

விவசாயிகள் வலியுறுத்தல்

முக்கியத்தும் வாய்ந்த ஏழு குளங்களில் தேக்கப்படும் தண்ணீர், தற்போது பல்வேறு காரணங்களால், மாசுபட்டு வருகிறது. அதன்படி, தளி பேரூராட்சியை ஒட்டி தினைக்குளம் உள்ளது.இக்குளத்தில், பேரூராட்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தளி வாய்க்காலை கடந்து, நேரடியாக குளத்தில் கலக்கிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, தீர்வு காணப்படவில்லை.இதே போல், பள்ளபாளையம் ஊராட்சியை ஒட்டி செங்குளம் அமைந்துள்ளது. கிராமத்தின் ஒட்டுமொத்த கழிவுநீரும், செங்குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் கலக்கிறது.மழைக்காலத்திலும், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் போதும், இக்கழிவுகள், நேரடியாக குளத்து நீரில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. இவ்வாறு, நேரடியாக கழிவு நீர் கலப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, தண்ணீரை அதிகம் உறிஞ்சி, நீர் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஆகாயதாமரை உட்பட செடிகள் குளத்தை ஆக்கிரமிக்கின்றன. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், முழுமையான பலன் அளிக்கவில்லை.இதே போல் ஒட்டுக்குளத்திலும் கழிவு நீர் கலக்கும் பிரச்னை உள்ளது. இத்தகைய தொடர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, குளங்களில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தடுக்க வேண்டும்.ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாததால், எவ்வகை நிரந்தர திட்டங்களையும் செயல்படுத்த முடிவதில்லை என உள்ளாட்சி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குளங்களை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக பாசன விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதற்கட்டமாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழு அமைத்து பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பிட்ட மாதங்கள் தண்ணீர் தேங்கும் இக்குளங்களில் மீன் வளம் அதிகம் உள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், மீன் பிடிக்க டெண்டர் விடப்பட்டு, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.அதே போல், தினைக்குளம் உட்பட குளங்களில் தாமரை மற்றும் அல்லி மலர்கள் அதிகம் காணப்படும். நீர் வற்றியதும், இவற்றின் கிழங்குகளை தோண்டி, மருத்துவ தேவைக்காக அப்பகுதி மக்கள் விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு, அருகிலுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு வகைகளிலும், குளங்கள் உதவி வருகின்றன. எனவே குளங்களை பாதுகாக்க, பல கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை