உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாசமில்லா மலரிது... அதிக விலை தேடுது!

வாசமில்லா மலரிது... அதிக விலை தேடுது!

கோவை;பனிப்பொழிவு காரணமாக கோவை புறநகர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் மல்லிகைப்பூ வரத்து குறைந்தது. பூமார்க்கெட்டில் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மல்லிகை விற்றது.கோவைக்கு சத்தியமங்கலம், நாமக்கல், நிலக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து மல்லிகை தருவிக்கப்படுகிறது. தற்போது வரை பெய்து வரும் பனிப்பொழிவால், மல்லிகை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நன்கு பறிப்புக்கு வந்த மல்லிகை, மொட்டுக்களாக பனியில் கருகிபோகிறது. விளைச்சலும் குறைந்துள்ளதால், கோவை பூமார்க்கெட்டிற்கு வழக்கமாக வரும் மல்லிகை அளவு குறைந்துள்ளது.வழக்கமாக காலை நேரங்களில் இரண்டு டன்னும், மதிய நேரங்களில் மூன்று டன்னும் மார்க்கெட்டிற்கு வரும். தற்போது வெறும் 500 கிலோ வருவதே குதிரை கொம்பாக உள்ளது.இதனால், ஒரு கிலோ மல்லிகை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை விற்பனையானது. காக்கடா என்றழைக்கப்படும், வாசமில்லா மல்லிகை கிலோ ரூ.100க்கு வழக்கமாக விற்பனையாகும். அது 500 ரூபாய்க்கு விற்றது.இது குறித்து, கோவை மலர் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் கூறுகையில், ''பனியால் எல்லா பகுதிகளிலும் மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. மொட்டுக்கள் மலர்வதே இல்லை. பிப்ரவரி வரை இப்படித்தான் இருக்கும்.கோவை புறநகர் பகுதிகளான அத்திப்பாளையம், அப்பநாயக்கன்பாளையம் பகுதிகளிலிருந்து வரும் மல்லிகை பூக்களை கொண்டு சமாளிக்கிறோம். வெளி மாவட்டங்களிலிருந்து மல்லிகை வருவதே இல்லை. அதனால்தான் இந்த விலை உயர்வு. இது தவிர்க்க முடியாதது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ