மாணவருக்கு அரிவாள் வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை
கோவில்பாளையம் : கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டிய, ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பாளையம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் அருப்புக்கோட்டை சேர்ந்த சிவ சவின்,20 என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் கரட்டுமேட்டில் வசித்து வரும் தனியார் கலை கல்லூரி மாணவர் ஹரி பிரசாத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.இதில் ஹரிபிரசாத்தின் நண்பர் வெற்றி என்பவர் மீது மொபைல் திருட்டு வழக்கு உள்ளது. இந்நிலையில் வெற்றி, ஹரி பிரசாத் மற்றும் ஐந்து பேர் நேற்று முன்தினம் சிவ சவினை வாகனத்தில் கடத்திச் சென்று, தென்னை மட்டையால் அடித்து அரிவாளால் காலில் வெட்டி உள்ளனர். சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் தப்பிச் சென்றனர். சிவ சவின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிபிரசாத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெற்றி உள்பட மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.