உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம்;  38 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு: பொள்ளாச்சி கோர்ட் நடவடிக்கை

ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம்;  38 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு: பொள்ளாச்சி கோர்ட் நடவடிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்டு, 38 ஆண்டுகளாக நீதிமன்ற பொறுப்பில் இருந்த ஒரு சவரன் தாலி மற்றும் 10 ரூபாய் பணம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. மனைவி அருக்காணி மற்றும் மூன்று வயதுள்ள இரட்டை குழந்தைகளை, கடந்த, 1987ம் ஆண்டு முத்துச்சாமி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.இது குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அருக்காணியின் ஒரு சவரன் தாலி, 10 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், கோர்ட்டில் ஒப்படைத்தனர். போலீசார், முத்துச்சாமியை கைது செய்யாததால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. பொள்ளாச்சி ஜே.எம்.,2 கோர்ட் மாஜிஸ்திரேட் பிரகாசம், கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட தாலி மற்றும், 10 ரூபாய் நோட்டை, இறந்தவரின் உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, கடந்த, ஒரு மாதமாக அருக்காணியின் உறவினர் எங்கே உள்ளனர் என தேடி, வெள்ளாளபாளையத்தில் வசிக்கும் அவரது அக்கா முத்தம்மாள்,82, என்பவரை கண்டுபிடித்தனர். அவரிடம், நேற்று 10 ரூபாய் நோட்டு, ஒரு சவரன் தாலி ஒப் படைக்கப்பட்டது.இது குறித்து வக்கீல்கள் கூறுகையில், 'கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், 38 ஆண்டுகளுக்கு பின் அருக்காணியின் உறவினரை தேடி, நகை, பணம் ஒப்படைக்கப்பட்டது,' என்றனர்.முத்தம்மாள் கூறுகையில், ''பல ஆண்டுக்கு முன், எனது தங்கையையும், இரு குழந்தையையும் கொன்று விட்டார். கோர்ட்டில் இருந்த தங்கையின் தாலியை பெற்றுக்கொள்ளுமாறு சொன்னாங்க; அவற்றை பெற்றுக்கொண்டேன்,'' என்றார்.கடந்த, 38 ஆண்டுகளாக கோர்ட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஏப் 17, 2025 08:08

குற்றவாளி முத்துசாமியை 1987 லிருந்து தேடுறாங்க. 2047 க்குள்ளாற புடிச்சி சட்டம் கடமையைச் செய்ய உடுவாங்க.


சமீபத்திய செய்தி