உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குள்ளக்காபாளையம் பிரிவில் சர்வீஸ் ரோடு எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் குழு ஆய்வு

குள்ளக்காபாளையம் பிரிவில் சர்வீஸ் ரோடு எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் குழு ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், குள்ளக்காபாளையம் பிரிவில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள், பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.அதில், குள்ளக்காபாளையம் பிரிவில், கிழக்கு புறவழிச்சாலைக்கு அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கீழ் ரோடு இல்லாமல் கட்டப்பட்டு வருகிறது.இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.சுற்று வட்டார கிராம மக்கள், பொள்ளாச்சி கிழக்கு புறவழிச்சாலை வழியாக பொள்ளாச்சி - கோவை ரோட்டை அடைய பல கி.மீ., துாரம் சுற்றி வரும் சூழல் உள்ளது.எனவே, மேம்பாலத்தின் இருபுறமும் சுற்றுப்பகுதி விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் குள்ளக்காபாளையம் பிரிவு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைப்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது. மேலும், குள்ளக்காபாளையம், குரும்பபாளையம், போத்தனுார், பழநிக்கவுண்டன்புதுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடு புறவழிச்சாலை ரோடு அ.தி.மு.க., ஆட்சியில், 25 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டது.''சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து கிழக்கு புறவழிச்சாலை வழியாக சுற்று வட்டார கிராமத்துக்கு செல்வதற்கு தனியாக, 3.5 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அதிகாரிகள் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் கூறுகையில், ''பொள்ளாச்சி - கோவை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. குள்ளக்காபாளையம் சர்வீஸ் ரோடு அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி பெற்று கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.''தற்போது, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்தால் இப்பகுதி வளர்ச்சி பெறும். அ.தி.மு.க., ஆட்சியில் இப்பகுதியில் பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள் கொண்டு வர அப்போதைய முதல்வர் பழனிச்சாமி முயற்சி எடுத்தார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பல நிறுவனங்கள் கொண்டு வரப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !