உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளலுார் பேரூராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தர்ணாவால் பரபரப்பு

வெள்ளலுார் பேரூராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தர்ணாவால் பரபரப்பு

போத்தனூர்; கோவை, வெள்ளலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளலூர் பேரூராட்சி கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், நேற்று காலை தலைவர் மருதாசலம் தலைமையில் நடந்தது. அப்போது, 10வது வார்டு கவுன்சிலர் பவித்ரா (தி.மு.க.), பேரூராட்சியின் மாதாந்திர வரவு - செலவு விபரம் குறித்து கேட்டார். தலைவர், செயல் அலுவலர் தர மறுத்துள்ளனர். இதனால் பவித்ரா கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கூட்டம் முடிந்த பின்னும், பவித்ரா தர்ணாவை தொடர்ந்தார். ஒரு மணி நேரத்திற்கு பின் செயல் அலுவலர் சுலைமான், வரவு - செலவு விபரங்களை தர ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை நடந்த தர்ணா முடிவுக்கு வந்தது. செயல் அலுவலர் சுலைமானிடம் கேட்டபோது, ''வரவு - செலவு விபரம் குறித்து என்னிடம் கேட்டால் எப்போது வேண்டுமானாலும் தருவேன். விபரம் தரக்கூடாது என தலைவர் கூறவில்லை,'' என்றார். தலைவர் மருதாசலம் கூறியதாவது:எனக்கு முன்பிருந்த தலைவர்கள், இவ்விபரம் கொடுத்துள்ளனர். நான் இதுவரை தந்ததில்லை. அதுபோல் இவரும் (பவித்ரா) கேட்டதில்லை. எனது வார்டில் (15 வது) பை-பாஸ் சாலையை ஒட்டி எப்.எல். 2 பார் திறக்க, இவரது கணவர் வேலை செய்து வருகிறார். நான் எனது வார்டில் பார் வரக்கூடாது என தடுத்து வருகிறேன். அவ்விடம் விவசாய பூமி. அதற்கு கமர்சியல் வரி விதிக்க நான் அனுமதிக்கவில்லை. அவர்களது கட்சி நிர்வாகிகள், செயல் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர் என்னிடம் அதனை கூறினார். நான் நீங்கள் போட்டு கொடுத்து விடுங்கள்; நான் இயக்குனர் வரை பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டேன். அதற்காக இன்று (நேற்று) தீர்மானம் ஒன்றும் கொண்டு வரப்பட்டு, மற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஏற்றுக் கொண்டனர். பேரூராட்சியின் வரவு -- செலவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. செயல் அலுவலர் தான் அதற்கு பொறுப்பு. நான் யாரையும் தரக்கூடாது என தடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

தர்ணாவில் ஈடுபட்டது ஏன்?

கவுன்சிலர் பவித்ரா கூறுகையில், ஆரம்பம் முதலே வரவு -- செலவு விபரம் தருமாறு தலைவரிடம் கூறினேன். அவர் மறுத்து விட்டார். செயல் அலுவலரிடம் கேட்டால், தலைவர் கூறினால் மட்டுமே தர முடியும், என்கிறார். இதுபோல் இருந்தால், பேரூராட்சியில் என்ன நடக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அ.தி.மு.க., ஆட்சியின்போது தலைவர் இவ்விபரத்தை தந்துள்ளார். இப்போது ஏன் தர மறுக்கிறார். அதனால்தான் தர்ணாவில் ஈடுபட்டேன்,'' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை