உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்ட் ஆபீசில் ஆதார் சேவை முடக்கம் : ஊழியர் பற்றாக்குறையால் சிக்கல்

போஸ்ட் ஆபீசில் ஆதார் சேவை முடக்கம் : ஊழியர் பற்றாக்குறையால் சிக்கல்

வால்பாறை: வால்பாறை போஸ்ட் ஆபீசில் ஆதார் பதிவுக்கு ஆள் நியமிக்காததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வால்பாறை தலைமை போஸ்ட் ஆபீசில் மக்கள் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். சிறுசேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேர்ந்து பயன்பெறுகின்றனர். இந்நிலையில், போஸ்ட் ஆபீசில் ஊழியர் பற்றாக்குறையால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அலுவலக பணிக்காக, 7 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது, 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்ட ரயில்வே முன்பதிவு கவுன்டர் போதிய முன்பதிவு இல்லாததால் திடீரென மூடப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து வெளியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, போஸ்ட் ஆபீசில் ஆதார் பதிவு மையம் இருந்தும், பதிவு செய்ய ஊழியர் இல்லாததால், வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது: வால்பாறை போஸ்ட் ஆபீசில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தினாலும், பணியாளர்கள் பற்றாக்குறையால், வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போஸ்ட் ஆபீசில் ஆதார் சேவை மையம் துவங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இதற்கான ஊழியர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. எனவே வாடிக்கையாளர்களின் நலன் கருதி போஸ்ட் ஆபீசில் ஆதார் சேவையை சேற்கொள்ள, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ