சொத்து வரி உயர்வு ரத்து செய்யுங்கள்: மாநகராட்சிக்கு ம.தி.மு.க., கோரிக்கை
கோவை : சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, 6 சதவீத சொத்து வரி உயர்வை, கோவை மாநகராட்சி ரத்து செய்ய, ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாநகராட்சி ம.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டம், மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது; மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், உயர்நிலைக் குழு உறுப்பினர் மோகன் குமார், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சேதுபதி, சட்டத்துறை செயலாளர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர்.'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான், கோவை மாநகராட்சியில், 100 முதல், 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. இப்போது, அக்., 1 முதல் மீண்டும் 6 சதவீதம் வரி உயர்த்தியிருப்பது, அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படையச் செய்யும். இந்த வரி உயர்வு தமிழக அரசுக்கும், கோவை மாநகராட்சிக்கும் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தும். அதனால், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், கவுன்சிலர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, தர்மராஜ், சித்ரா தங்கவேலு, மாநகர் மாவட்ட துணை செயலாளர் தியாகு, பகுதி கழக செயலாளர் வெள்ளியங்கிரி, தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.