வெளியே அடங்காத குற்றவாளிகளை உள்ளே அடைத்து நடவடிக்கை
கோவை; கோவை மாநகர போலீசாரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கோவை மாநகர போலீசாரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களில், ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தங்கள் மீதுள்ள வழக்குகளின் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றவாளிகள், ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 110 பேரை, மாநகர எல்லையில் இருந்து ஆறு மாதங்களுக்கு ஒதுக்கி வைத்து, மாநகர கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவிற்கு மாறாக, மாநகர எல்லையில் இருந்து வெளியேறாமல் இருந்த, 9 பேரை, தமிழ்நாடு நகர காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மார்ச் மாதத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த, 28 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில், 10 பேர் மீது மருந்து சரக்கு குற்றவாளிகள் பிரிவின் கீழும், 14 பேர் மீது குண்டர் தடுப்பு பிரிவின் கீழும், 4 பேர் மீது பாலியல் குற்றவாளிகள் பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.