மேட்டுப்பாளையம், பிப். 23--மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, 18 தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைகள் உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன. மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீர், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீர், வனவிலங்குகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது. தற்போது கோடை காலம் நெருங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், வனப்பகுதிகளில் சில இடங்களில் வறட்சி நிலவுகிறது.நீரோடைகளில் தண்ணீர் மிகவும் குறைந்து வருகிறது. இதையடுத்து வனப்பகுதிகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, இங்குள்ள தண்ணீர் தொட்டிகள், தடுப்பணைகள், குட்டைகளில், வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 18 தண்ணீர் தொட்டிகள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒன்பது இடங்களில் குட்டைகள் உள்ளன. இரண்டு தண்ணீர் தொட்டிகளுக்கு சோலார் அமைப்பு வாயிலாகவும், மற்ற தொட்டிகளுக்கு மின்மோட்டார் மற்றும் குழாய் வாயிலாகவும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், நீரோடைகள், குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் வற்ற துவங்கியுள்ளது. தினமும் தண்ணீரின் அளவை பார்த்து, தொட்டிகளில் தண்ணீர் தீராத வகையில் நிரப்பப்படுகின்றன.சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தண்ணீர் தொட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. அதே சமயம் தண்ணீர் குடிக்க வரும், வனவிலங்குகள் கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.---