உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடிகர் ராஜேஷ் திடீர் மறைவு

நடிகர் ராஜேஷ் திடீர் மறைவு

சென்னை:தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ், 75, வயதுமூப்பு மற்றும் உடல் நலக்குறைவால், சென்னையில் நேற்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த நடிகர் ராஜேசுக்கு, நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரது உறவினர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜேஷ் இறந்தார்.அவரது உடல் அஞ்சலிக்காக, ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி ஜோன் சில்வியா, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள அவரது மகள் திவ்யா, நாளை சென்னை வருகிறார். அவர் வந்தவுடன், ஜூன் 1ம் தேதி இறுதிச் சடங்குகள் நடக்க உள்ளன. ராஜேஷ் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி, டி.ராஜேந்தர் உள்ளிட்டோரும், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், 1949ம் ஆண்டு டிச., 20ல் பிறந்த ராஜேஷ், பள்ளி ஆசிரியர் வேலையை துறந்து, சினிமாவில் நடித்தார். 1974ல் கே.பாலச்சந்தர் இயக்கிய, அவள் ஒரு தொடர்கதை படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, கன்னிப் பருவத்திலே, அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, சிறை, ஆலய தீபம் உள்ளிட்ட, 150 படங்களில் நடித்துள்ளார்.மேலும், 'அலைகள், ஆண் பாவம், சூர்யவம்சம்' உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிப் படங்களில் நடித்துள்ள இவர், பல படங்களுக்கு பின்னணி குரலும் பேசியுள்ளார். சினிமா தவிர்த்து, ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழிலிலும் ஈடுபட்ட இவர், ஜோதிடம் குறித்த பல புத்தகம் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பன்முக திறன் பெற்றவரான ராஜேஷ், தன் கலைப் பயணத்தில், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி