தீபாவளிக்கு கூடுதல் போனஸ்; தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
வால்பாறை; தீபாவளிக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வால்பாறையில் தேயிலை மிக முக்கிய தொழிலாக உள்ளது. இவர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கான போனஸ் வழங்கப்படுகிறது. தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டு, 8.33 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், வால்பாறை தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான போனஸ் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. எஸ்டேட் தொழி லாளர்கள் கூறியதாவது: வால்பாறையில் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயில் மற்றும் கடும் பனியிலும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட்களில் உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறோம். எங்களுக்கு கடந்த ஆண்டை போல், குறைவான போனஸ் வழங்காமல், வேலைப்பழுவை கணக்கில் கொண்டு, கூடுதல் போனஸ் வழங்க எஸ்டேட் நிர்வாகங்கள் முன் வர வேண்டும். தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் எஸ்டேட் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.