காசநோய் கண்டறியும் பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் தவிர்க்க அறிவுறுத்தல்
கோவை; அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் அனைத்திலும் காசநோய் பரிசோதனைக்கு, மைக்ரோஸ்கோப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள் ளன. காசநோய் பாதிப்பு முன்கூட்டியே கண்டறிந்தால், அதன் தன்மைக்கு ஏற்ப, ஆறு மாதம், ஒன்பது மற்றும் 12 மாதம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் இருமல், சளியில் ரத்தம் வருதல், இருமும் போது நெஞ்சு வலி, எடை குறைதல், பசியின்மை, மாலை நேர காய்ச்சல் இதன் அறிகுறிகள். கோவை மாவட்டத்தில் காசநோய் பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசநோய் ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், தனியார் மையங்களில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு, மைக்ரோஸ்கோப் பயன்படுத்துவதால், துல்லியமான முடிவுகள் கிடைப்பது இல்லை. ஆகவே தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'நேட்.,' முறைக்கு மாறுங்கள்!
கோவை மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்ட துணை இயக்குனர் சக்திவேலிடம் கேட்டபோது, ''மைக்ரோஸ்கோப் வாயிலாக, பரிசோதனை செய்வதை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளோம். இதற்கு மாற்றாக, நியூக்ளிக் அமில பெருக்க சோதனைகள் (என்.ஏ.ஏ.டி.,- நேட்) பரிசோதனை செய்வதால், ஆரம்ப நிலையிலேயே எளிதாக கண்டறிய முடியும். முகாம்கள் நடத்தும்போது, விரைந்து பரிசோதனைகள் செய்ய இம்முறை உதவியாக இருக்கும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம்,'' என்றார்.