குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை
மேட்டுப்பாளையம், ; வெள்ள பெருக்கு காரணமாக பவானி ஆற்று நீர் செந்நிறமாக செல்கிறது. நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என காரமடை வட்டார சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.நீலகிரியில் பெய்து வரும் மழையால் பில்லூர் அணை நிரம்பியுள்ளது. உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. வெள்ளபெருக்கு காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறமாக செல்கிறது. இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார துறையினர் கூறுகையில், பவானி ஆற்று நீர் மண் கலந்து செந்நிறமாக செல்வதாலும், தற்போது மழை பெய்து வருவதாலும் தண்ணீரில் நோய் தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது. மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சளி, காய்ச்சலும் வர வாய்ப்புள்ளது. தண்ணீரை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் தானாக மருந்துகளை உட்கொள்ள கூடாது. மருத்துவர்களின் பரிந்துரை மிகவும் அவசியம். அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவில் உள்ளன, என்றனர்.