நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலி பதவிகள் இடைத்தேர்தல் நடத்த 27ல் ஆலோசனை
கோவை : கோவை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், 27ம் தேதி நடக்கிறது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், 2027 வரை இருக்கிறது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி, நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 13 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த ஜன., 5ல் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ள வார்டுகளுக்கு பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள, 27ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிக்கு, இடைத்தேர்தல் நடத்த எத்தனை இடங்களில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்க வேண்டும்; ஏதேனும் மையத்தை இடம் மாறுதல் செய்ய வேண்டுமா; வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டதா; ஓட்டுப்பதிவுக்கு எத்தனை அலுவலர்கள் தேவைப்படுவர்; ஓட்டு எண்ணிக்கை மையம் எங்கு அமைக்கப்படும் என்கிற விபரத்தை, அந்த உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இடைத்தேர்தல் எங்கெங்கு?
கோவை மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் பதவி, பொள்ளாச்சி நகராட்சி - 7 வது வார்டு, 21வது வார்டு, 12வது வார்டு, மேட்டுப்பாளையம் நகராட்சி - 2வது வார்டு, தாளியூர் பேரூராட்சி - 3வது வார்டு, தென்கரை பேரூராட்சி - 1வது வார்டு, செட்டிபாளையம் பேரூராட்சி - 4வது வார்டு, 10வது வார்டு, வீரபாண்டி பேரூராட்சி - 13வது வார்டு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி - 2வது வார்டு, வேடபட்டி பேரூராட்சி - 11வது வார்டு, கோட்டூர் பேரூராட்சி - 15வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.