உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவு! அடுத்த மாதம் முதல் வழங்க ஆலோசனை

மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவு! அடுத்த மாதம் முதல் வழங்க ஆலோசனை

கோவை: கோவையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஒரு வேளை உணவு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சியில் காலை உணவு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒப்பந்த நிறுவனத்தை இறுதி செய்து, டிச. முதல் தொழிலாளர்களுக்கு வினியோகிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய, தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் மோகன், உதவி நகர் நல அலுவலர் பூபதி மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொறியியல் பிரிவினர் பங்கேற்றனர். காலை உணவு வழங்கும் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சியின் அனைத்து பகுதிக்கும் வினியோகிக்கும் வகையில் ஓரிடத்தில் கிச்சன் ஏற்படுத்தவும், அங்கிருந்து தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மண்டலம் வாரியாக ஒவ்வொரு வார்டு அலுவலகங்களுக்கு வேன்கள் மூலம் கொடுத்தனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. தேவையான டிபன் பாக்ஸ்கள் சென்னையில் கொள்முதல் செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஒப்பந்த முறையில் உணவு நிறுவனத்தையும், வினியோகம் செய்வதற்கான வழித்தடத்தை உருவாக்குவதையும் மாநகராட்சி முடிவு செய்ய வேண்டும். தேவையான தொகையை மாநகராட்சி பொது நிதியில் செலவழிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காலை 8.30 மணிக்கு தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்துக்குச் சென்று வினியோகிக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது. அதற்கு வார்டு அலுவலகத்தில் இருந்து இன்னொரு வேனில் உணவுகளை ஏற்றி, வீதி வீதியாக எடுத்துச் செல்ல நேரிடும். காலை 6.30க்கு வார்டு அலுவலகத்தில் இருந்து புறப்படும்போதே, உணவு பார்சல் கொடுத்து விட்டால் சிரமத்தை தவிர்க்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், லாரி டிரைவர்களுக்கு காலை உணவு, இரவு ஷிப்ட் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரவு டிபன் வழங்க இருக்கிறோம். இரு ஷிப்ட்டுகளும் சேர்த்து 8,200 தொழிலாளர்கள் உள்ளனர். இத்திட்டம் அடுத்த மாதம் (டிச.) துவங்க இருக்கிறது. இட்லி, சாம்பார், கிச்சடி, பொங்கல் என ஏதேனும் ஒரு உணவு சுழற்சி முறையில் தினமும் வழங்கப்படும். பொதுவான இடத்தில் கிச்சன் அமைத்து, உணவு தயாரித்து, மண்டலம் வாரியாக வினியோகிக்க உள்ளோம். தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை