| ADDED : டிச 03, 2025 06:33 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டார விவசாயிகள் சோளம் பயிருக்கு காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும் ராபி பருவத்தில், 800 ஹெக்டேர் அளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளில் உண்டாகும் மகசூல் இழப்பை சரி செய்ய சோளம் பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் வாயிலாக சோளம் பயிருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. சோளத்துக்கு பிரீமியம் தொகையாக, 173 ரூபாயும், காப்பீட்டுத் தொகையாக 11 ஆயிரத்து 503 (ஒரு ஏக்கருக்கு) உள்ளது. இந்த பிரீமியம் தொகையை வரும் 16ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆதார் கார்டு, சிட்டா, அடங்கல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் மற்றும் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு குறித்து, கூடுதல் தகவல்கள் அறிய அந்தந்த பகுதி வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண்துறை உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.