உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாரதம் வளர்ச்சி பெற விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும்! வாழை தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் தகவல்

 பாரதம் வளர்ச்சி பெற விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும்! வாழை தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் தகவல்

பொள்ளாச்சி: 'வரும், 2047ல் பாரதம் வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன,' என, வாழை தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன் தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரியில், 'நிலையான மீள்தன்மை கொண்ட விவசாயம்' என்ற தலைப்பில், இரண்டு நாள் வேளாண் தேசிய மாநாடு நேற்று துவங்கியது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ரம்யா வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்து பேசினார். 'பூமியை காப்பதற்கான இலக்குகள்' என்ற தலைப்பில், திருச்சி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வாழை தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன் பேசியதாவது: கடந்த, 75 ஆண்டுகளில், மக்கள் தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதே கால கட்டத்தில் உணவு தானிய உற்பத்தி, 6.6 மடங்கு அதிகரித்துள்ளது.விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 18 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால், அது நிலையானதாக இருக்க வேண்டும்.கொரோனா காலத்தில் சோளக்கஞ்சி உணவாக உட்கொள்ளப்பட்டது. இதற்காக சோளம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் தோட்டக்கலை உற்பத்தி, 25 மில்லியன் டன்னிலிருந்து, 360 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி, 70 மில்லியன் டன்னிலிருந்து, 330 மில்லியன் டன்னாகவும், மீன் உற்பத்தி, 2.4 மில்லியன் டன்னில் இருந்து, 18.4 மில்லியன் டன்னாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, பேசினார். கல்லுாரி இயக்குனர் கெம்புச்செட்டி, கோவை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலராவ், எம்.ஐ.டி. வேளாண் கல்லுாரி முதல்வர் ராகுச்சந்தர் பேசினர். மாநாடு இணை ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நன்றி கூறினார். புதிய ரகங்கள்! வாழை தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர், நிருபர்களிடம் கூறியதாவது: பசுமை புரட்சியில் உணவு உற்பத்தி அதிகரித்து, தற்போது, 50 மில்லியன் யு.எஸ். டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தண்ணீர் அளவு குறைவாக இருந்தாலும் அதிகமாக மகசூல் தரக்கூடிய ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமம், 113 இன்ஸ்ட்டியூட், 77 வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.2047ம் ஆண்டு பாரதம் வளர்ச்சி பெற விவசாயம் முக்கி பங்கு வகிக்கும். 48 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். வாழையில் புதியதாக எட்டு ரகங்கள் கண்டறியப்பட்டன. அதில், இயற்கை சீற்றங்களை தாங்க கூடிய குட்டையான காவேரி வாமன், தேன் வாழையில் காவேரி கல்கி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவை, காற்று, மழைக்கு சாயாமல் மகசூல் கொடுக்க உதவும். மேலும், நோய்களை எதிர்த்து வளரக்கூடிய புதிய ரகம் கண்டறியப்பட்டுள்ளது. ஓரிரு ஆண்டில் அந்த ரகம் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு, கூறினார்.

212 ஆராய்ச்சி கட்டுரைகள்!

மாநாட்டில், 13 முன்னணி ஆய்வு உரைகள், 212 ஆராய்ச்சி கட்டுரைகள் வழங்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. வேளாண் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், காலநிலை மாற்றத்துக்கான வேளாண் மேலாண்மை, துல்லிய வேளாண்மை, உயிரியல் பாது காப்பு முறைகள், கொள்கை வடிவமைப்பு, நவீன நுண்ணுயிர் தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் முன் வைக்கப்படுகிறது.தொடர்ந்து, இன்றும் கருத்தரங்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை