| ADDED : ஜன 11, 2024 10:45 PM
பொள்ளாச்சி;சுயநிதி திட்டத்தின் கீழ் விற்கப்பட்ட பழமையான வீடுகளுக்கு மாற்றாக, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.பொள்ளாச்சி அடுத்த, ராமாப்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்மலையூர் பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிக் கட்டடம் கட்டுமானத்திற்கு பூமி பூஜை; வடுகபாளையம் சமுதாய கூடத்தில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை பதிவு முகாமில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்டம் குறித்து மக்களிடையே போதியளவு விழிப்புணர்வு இல்லை. எனவே, மக்கள் பயன்பெறும் வகையில், 10 இடங்களில், காப்பீட்டு அட்டை பதிவு முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி, ஒரு முகாமில், 300 பேர் வரை பதிவு செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நகர்ப்புற மேம்பாட்டு துறை வாயிலாக வீடுகள் கட்டப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு, சுயநிதி திட்டத்தின் கீழ் விற்கப்படுகிறது. ஏற்கனவே, கட்டப்பட்ட மூவாயிரம் வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவைகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளை வாடகைக்கு விடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேபோல, சுயநிதி திட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலான பழைய கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வீட்டு வசதி வாரியம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.