உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மகளிர் தொழில் துவங்க அசத்தலான திட்டம்: ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற வாய்ப்பு

 மகளிர் தொழில் துவங்க அசத்தலான திட்டம்: ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற வாய்ப்பு

கோவை: தமிழ்நாடு மகளிர் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன், வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை, தொழில் முனைவோராக உயர்த்திடும் வகையில், 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் கீழ், 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடனுதவி பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் துவங்க, உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில் முனைவோருக்கான ஒரு சிறப்பான திட்டமாகும். முக்கியமாக, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வருபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் தொழில் துவங்க, 18 வயது முதல் 55 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி தேவையில்லை. தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில் துவங்க, திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் இருந்து 25 சதவீத மானியம், தமிழக அரசால் முன் மானியமாக வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மானியத்தொகை, அரசால் வழங்கப்படும். 5 சதவீதம் சொந்த முதலீடு செய்யப்பட வேண்டும். கடனுதவி பெற சொத்துப் பிணையம் ஏதும் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், கைவினைப் பொருட்கள், சந்தை மதிப்பு அதிகமுள்ள சேவை தொழில்கள், ஊட்டச்சத்து பொருட்கள், மூலிகை பொருட்கள் தயாரிப்பு ஆகிய தொழில்கள் துவங்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி, திருநங்கையர், கைம்பெண் ஆகியோருக்கான சான்று, பள்ளி, கல்லுாரி மாற்றுச் சான்றிதழ், ஜி.எஸ்.டி., எண்ணுடனான விலைப்பட்டியல், புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தகம்.கோவை மாவட்ட அலுவலகத்திற்கு 719 பேருக்கு, 8 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்த தகவல்களை பெற www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற, 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2 ராஜவீதி, கோவை' அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 944 35 65891, 96004 63757, 89255 33934 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். திட்டத்தில் மகளிர் விண்ணப்பித்து பயன்பெற, மாவட்ட கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி