மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு எளிய வினாத்தாள் கற்றல் திறன் மேம்பட வாய்ப்பு
கோவை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திறன் திட்டம், மாணவர்கள் இடையே நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிலருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணிதத் திறனில் இருக்கும் கற்றல் இடைவெளியை குறைக்க, நடப்பு கல்வியாண்டில் திறன் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு ஆக., மாதம் முழுவதும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தற்போது நடத்தப்படும் காலாண்டு தேர்வில், திறன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு பிரத்யேகமாக தயாரித்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இவை மாணவர்களின் அடிப்படை புரிதலை பரிசோதிக்கும் வகையில் மிக எளிமையாக இருந்தன. குறிப்பாக, கணிதப் பாடத்தில் ஏறுவரிசை, இறங்கு வரிசை எண்களைக் கண்டறிதல் போன்ற எளிமையான கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன. இதனால், திறன் வகுப்பில் ஓரளவுக்கு கவனம் செலுத்திய மாணவர்கள், இத்தேர்வுகளை மிகவும் எளிதாக எதிர்கொண்டனர். இதேபோல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களும் அடிப்படை புரிதலை மையமாகக் கொண்டே கேட்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பாடங்களிலும் மாணவர்களின் அடிப்படை புரிதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் கூறுகையில், 'திறன் வகுப்பில் பயிற்சி பெற்றதால், மாணவர்கள் வழக்கமான வகுப்பு பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். அடிப்படை எழுத்துக்களை கூட அறியாமல் இருந்த மாணவர்கள், தற்போது எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழகியுள்ளனர். இது மாணவர்களின் கற்றல் அடைவை உயர்த்துவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும், திறன் வகுப்பிலும் சில மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது' என்றனர்.