சாம்பியன் பட்டம் வென்ற அன்னுார் மாணவி
அன்னுார்: குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டியில், அன்னுார் மாணவி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.கோவை நேரு விளையாட்டரங்கில், 65வது குடியரசு தின விழா தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அன்னுார் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெனிபர், தட்டெறிதல் போட்டியிலும், குண்டு எறிதல் போட்டியிலும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதே பள்ளி மாணவி கனிஷ்கா தட்டெறிதலில், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்ற ஜெனிபர் தனிநபர் சாம்பியன் பட்டமும் வென்றார். சாதித்த மாணவியருக்கு, பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, இயக்குனர் சாந்தாமணி ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.