உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகர பகுதி எங்கும் பிளக்ஸ் மயம் விதிமுறைகள் எல்லாம் மாயம்

நகர பகுதி எங்கும் பிளக்ஸ் மயம் விதிமுறைகள் எல்லாம் மாயம்

உடுமலை: நகரில் விதிமுறைகளை மீறி, முக்கிய ரோடு சந்திப்புகளில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். விதிமுறை மீறல் குறித்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகரில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, ராஜேந்திரா ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட ரோடுகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாகும்.பொது இடங்களில், பிளக்ஸ் வைப்பதால், கவனச்சிதறல், விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், அவற்றை வைக்க, கோர்ட் தரப்பில், பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்பட்டது; கடந்த 2019ல், சென்னை பள்ளிக்கரணையில், பிளக்ஸ் விழுந்ததில், பைக்கில் சென்ற பெண், விபத்துக்குள்ளாகி இறந்தார்.இதையடுத்து, பிளக்ஸ் வைக்க நீதிமன்றம் தடை விதித்தது. அரசியல் கட்சியினரும், பிளக்ஸ் வைக்க மாட்டோம் என உறுதியளித்தனர்.ஆனால், தற்போது அனைத்து பகுதிகளிலும், பிளக்ஸ்கள் தாறுமாறாக வைக்கப்படுகிறது. போலீசாரும், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரும் இந்த விதிமீறலை கண்டுகொள்வதில்லை.உடுமலை நகரில், தற்போது திரும்பிய பக்கமெல்லாம் பிளக்ஸ் மயமாக மாறி விட்டது. பஸ் ஸ்டாண்ட் உட்பட போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மட்டுமல்லாது, பிற சந்திப்புகளிலும் பேனர்களை வைத்து, நீண்ட நாட்களுக்கு அகற்றுவதில்லை.இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ்களை உடனடியாக அகற்றி, விபத்துகளை தவிர்க்க வேண்டும்.மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ