உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்தாபுதுாரில் அடுக்குமாடி வீடு ஒதுக்க துாய்மை பணியாளர்கள் விண்ணப்பம்

சித்தாபுதுாரில் அடுக்குமாடி வீடு ஒதுக்க துாய்மை பணியாளர்கள் விண்ணப்பம்

கோவை; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்க, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், நேற்று விண்ணப்பம் பெறப்பட்டது.'அனைவருக்கும் வீடு' திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சித்தாபுதுாரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.தரைத்தளம் மற்றும், 6 தளங்களுடன், 112 வீடுகள், ரூ.14.72 கோடியில் கட்டப்பட்டுள்ளன. சித்தாபுதுாரில் வசிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு, முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், சங்கனுார் பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைப்பதற்காக, ஓடை புறம்போக்கில் வசிப்பவர்களில், 120 பேருக்கு சுகுணாபுரம், குறிஞ்சி நகர், சூலுார் பகுதி-2 ஆகிய இடங்களில் கட்டியுள்ள, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்பட உள்ளன.இவ்விரு திட்டங்களில், வீடு ஒதுக்கீடு பெற விருப்பமுள்ளோரிடம் விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.சித்தாபுதுாரில் வீடு பெற, 95 பேரும், சங்கனுார் பள்ளத்தில் வசிப்போரில், 78 பேரும் விண்ணப்பம் வழங்கினர்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் குமரேசன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், மண்டல தலைவர் மீனா, உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் ரமேஷ், கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விலை ரொம்ப அதிகம்

சித்தாபுதுார் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ13.14 லட்சம். பயனாளி பங்களிப்பு தொகை நான்கு லட்சத்து, 63 ஆயிரத்து, 840 ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இத்தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக, துாய்மை பணியாளர்கள் கருதுகின்றனர். அவர்களை மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் செய்துள்ளனர்.துாய்மை பணியாளர்கள் ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டியிருக்கிறது. எனவே, அவ்விடத்துக்கு வாரியம் தரப்பில் மாநகராட்சிக்கு வாடகையோ, குத்தகையோ கொடுக்கப்படுகிறதா என்பதை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை