வெள்ளைக்கார இன்ஜினியருக்கு, அரங்கநாத பெருமாள், கனவில் தோன்றி, சாட்டையால் இருமுறை அடித்ததாக கோவில் வரலாறு கூறுகிறது.கோவை -- மேட்டுப்பாளையம் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. காரமடையில் ரயில் பாதையை, அரங்கநாதர் கோவில் அருகே அமைக்க, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வெள்ளைக்கார இன்ஜினியர் திட்டமிட்டு இருந்தார். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திட்டத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், வெள்ளைக்கார இன்ஜினியர் கேட்காமல், ரயில் பாதை அமைக்க மதிப்பீடு தயார் செய்தார். அன்றைய வேலை முடிந்து, இரவு தூங்கும் போது, இன்ஜினியர் கனவில், அரங்கநாத பெருமாள் வெள்ளை குதிரை மேல் ஏறி வந்து, கோபத்துடன் இன்ஜினியரை சாட்டையால் இருமுறை அடித்தாராம். திடீரென கனவு கலைந்து எழுந்த அந்த இன்ஜினியர், தம் தவறை உணர்ந்து, அரங்கநாத பெருமானிடம் மன்னிப்பு வேண்டி பிறகு, ரயில் பாதையை வேறு பக்கம் மாற்றி அமைத்து, திருத்தி மதிப்பீடு தயாரித்து, மேலிடத்துக்கு அனுப்பினாராம். அவர் தம் சொந்த செலவில், வெள்ளை மரக்குதிரை ஒன்று செய்து, இக்கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்து, இறைவனை வணங்கினாராம். இன்றைக்கும் இக்கோவில் உற்சவமூர்த்தி, வெள்ளை குதிரை மேல் எழுந்தருளி, பரிவேட்டை உற்சவத்திற்கு செல்லும் திருவீதி உலா நடைபெறுகிறது.