பேரூராட்சி ஏலத்தில் வாக்குவாதம்; அதிக கட்டணம் நிர்ணயித்ததாக புகார் அதிக கட்டணம் நிர்ணயித்ததாக புகார்
அன்னுார்; பஸ் ஸ்டாண்ட் பொது கழிப்பறையில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக, ஏலத்தில் ஏலதாரர்கள் வாக்குவாதம் செய்தனர்.அன்னுார் பஸ் ஸ்டாண்டில், தினமும் 170 பஸ்கள் பலமுறை வந்து செல்கின்றன. பல ஆயிரம் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொது சுகாதார வளாகத்தில், குளியல் அறை, கழிப்பறையில் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.செயல் அலுவலர் கார்த்திகேயன் ஏலத்தை நடத்தினார். ''கழிப்பறையில், ஐந்து ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்,'' என்றார்.ஏலதாரர்கள் பேசுகையில், ''கழிப்பறைக்கு கோவை, திருப்பூர் போன்ற மாநகராட்சிகளில், மூன்று ரூபாய் கட்டணமும், மேட்டுப்பாளையம் போன்ற நகராட்சிகளில் ஒரு ரூபாய் கட்டணமும் நிர்ணயித்துள்ளனர். ஆனால், அன்னூர் பேரூராட்சியில் ஐந்து ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மிக அதிகம். இது பொதுமக்களை பாதிக்கும். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் செய்ய உள்ளோம்,'' என வாக்குவாதம் செய்தனர்.இந்நிலையில், ஏலத்தில் அதிக தொகையாக, மாதம் 84 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது.