பள்ளியில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி குறுமைய கலைத்திருவிழா போட்டியில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், புளியம்பட்டி குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. அதில், ஒன்றாம் மற்றும், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள், புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. புளியம்பட்டி பள்ளித் தலைமையாசிரியர் சித்ரா தலைமைவகித்தார். தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். போட்டிகளில், 13 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுநர் சுகன்யா ஒருங்கிணைத்து நடத்தினார். மாணவர்களிடையே, 'பசுமைப்புரட்சி மற்றும் பாரம்பரிய வளர்ச்சி' சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அனைத்துப் போட்டிகளும் நடக்கிறது. இந்த தலைப்பானது தமிழகத்தின் தொன்மைச்சிறப்பு, பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை பறைசாற்றும் விதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு- ஒன்றில், 1, 2 வகுப்புகளுக்கு ஓவியம், கதை கூறுதல், மாறுவேடம், களிமண் பொம்மைகள் செய்தல், தமிழ், ஆங்கில பாடல் என்ற, ஆறு போட்டிகள் நடைபெற்றது. பிரிவு- 2ல் 3,4,5 வகுப்புகளுக்கு 12 போட்டிகள் நடைபெற்றன. மேலும், 3,4,5 வகுப்புகளுக்கு பேச்சு, திருக்குறள், மெல்லிசை, தேசபக்திப் பாடல்கள், களிமண் பொம்மைகள், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம் உட்பட 12 போட்டிகள் நடைபெற்றன. குறுவள மைய அளவிலான போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்கள், பொள்ளாச்சி வடக்கு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். குறுவள மையத்துக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.