உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு 32 வகை திரவியங்களால் அபிஷேகம்

ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு 32 வகை திரவியங்களால் அபிஷேகம்

அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில், நடராஜருக்கு, 32 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மார்கழி மாதம் பவுர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடும் நாளில், சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடக்கும். அதன்படி அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, வெட்டிவேர், மஞ்சள் மற்றும் மூலிகை பொருட்கள் என 32 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.காலை 5:30 மணிக்கு துவங்கி 8:00 மணி வரை அபிஷேக பூஜை நடந்தது. திருவாசகம் வாசிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்மன் தனி தனி வாகனங்களில் 11 முறை பட்டி சுற்றும் வைபவம் நடந்தது. இதை தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன், தேரோடும் வீதி வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சூலுார்

சூலுார் வட்டார சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சின்னியம்பாளையம் ஸ்ரீ கணபதீஸ்வரர் கோவில், சூலுார் வைத்தீஸ்வரன் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், ராமாட்சியம்பாளையம் காசி விஸ்வநாதர் கோவில், சோமனுார் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் மற்றும் அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிவாலயங்களில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஆடல் வல்லான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு, மஞ்சள், குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. புதுமண தம்பதிகள் ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்து, திருமாங்கல்ய சரடு அணிந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், மனோன்மணி அம்மையார் உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. நேற்று காலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும், மனோன்மணி அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில், மனோன்மணி உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளினார். இதை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் கோவில் மனோன்மணி அம்மையாருக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதை அடுத்து திருக்கல்யாண வைபவ விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலி சரடு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை