பாசி போரக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்து ரூ. 1.61 கோடிக்கு ஏலம்
கோவை : 'பாசி போரக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கில், அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்ட வீட்டு மனை 1.61 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது.திருப்பூரில் செயல்பட்டு வந்த, 'பாசி போரக்ஸ்' என்ற நிதி நிறுவனம்,58 ஆயிரத்து 571 டெபாசிட்தாரர்களிடம், 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், அந்நிறுவன பங்குதாரர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோருக்கு, கடந்த 2022, ஆக.,ல், 27 ஆண்டு சிறை தண்டனை, 171 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பாசி நிதி நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டு, அரசால் இடை முடக்கம் செய்யப்பட்ட பல்வேறு சொத்துக்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. கோவை, விளாங்குறிச்சியில், 10 சென்ட் பரப்பளவு கொண்ட வீட்டு மனை, டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்பட்டது. இந்த வீட்டு மனை 1.61 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.