பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் அணையின் இரண்டு ஷட்டர்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகள், 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகே, கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் --- ஆழியாறு பாசன திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம்.இந்நிலையில், கடந்த, 2022ம் ஆண்டு செப்., 20ம் தேதி நள்ளிரவு சங்கிலி அறுந்து பக்கவாட்டு சுவருடன் ஷட்டரும் கீழே விழுந்தது.இதையடுத்து, பராமரிப்பு பணிக்காக, பரம்பிக்குளம் அணையில் இருந்து, 5.8 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டு, வீணாக கடலில் கலந்தது. உடைந்த, இரண்டாவது ஷட்டர் பராமரிப்பு பணிகள், 7.20 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, துாணக்கடவு அணையில், மூன்று வழிந்தோடும் ஷட்டர்கள், பரம்பிக்குளம் 'டனல்' (சுரங்கபாதை) முகப்பில் உள்ள இரண்டு ஷட்டர்கள் என, மொத்தம், ஐந்து ஷட்டர்கள், எட்டு கோடி ரூபாய் செலவில் கடந்தாண்டு சீரமைக்கப்பட்டது.தற்போது, பரம்பிக்குளம் அணையில் உள்ள, முதல் மற்றும் மூன்றாவது ஷட்டர்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசு கடந்த ஜன., மாதம் நிதி ஒதுக்கீடு செய்தது. மொத்தம், 24 கோடி ரூபாய் செலவில், பணிகள் நடைபெற்று வருகின்றன.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பரம்பிக்குளம் அணையில் நீர் வெளியேற்றும் ஷட்டர்கள் இரண்டு புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதில், ஷட்டர்களை இயக்க கூடிய உபகரணங்கள் புதுப்பித்தல், மதகுகள் உள்ள இரும்பு பாலம் மராமத்து பணிகள், அணை சுரங்கத்தின் முகப்பில் புதிய ரோப்கள் அமைத்தல், சுரங்க பாதை தளம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இரண்டு ஷட்டர்களும், 42 அடி அகலம், 27.25 அடி உயரம் கொண்ட, தலா, 40 டன் எடை கொண்டது. இப்பணிகள், பருவமழை துவங்குவதற்கு முன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.'மூன்று ஷட்டர்கள் வாயிலாக, வினாடிக்கு, 63 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்ற முடியும். அதற்கேற்ப ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து, பராமரிப்பு பணிகளும் மேற்கொள்வதால் எவ்வித இடையூறும் இல்லாமல், நீர் சேமித்து பாசனத்துக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, கூறினர்.