உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இலக்கு முடிப்பதில் இழுபறி நீடிப்பு

 அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இலக்கு முடிப்பதில் இழுபறி நீடிப்பு

கோவை: அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்ட இலக்கை முடிக்க முடியாமல், ஓராண்டிற்கும் மேலாக, நீர்வளத் துறையினர் திணறி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், காவிரி ஆற்றின் துணை ஆறான, பவானி ஆற்றின் குறுக்கே, காளிங்கராயன் அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது. இது நிரம்பி, வெளியேறும் உபரி நீரை 'பம்ப்' செய்து, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 1,045 நீர் நிலைகளை நிரப்பவும், 24,468 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்கவும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, நீர்வளத்துறை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை, 2024 ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்கு, 1,916 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதற்காக, 1,065 கி.மீ.,க்கு நிலத்தடியில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளன. பிரதான நீரேற்று நிலையம், காளிங்கராயன் அணைக்கட்டு அருகே அமைக்கப்பட்டு உள்ளது. திட்டம் துவக்கப்பட்டு, 16 மாதங்கள் முடிய உள்ள நிலையில், இத்திட்டத்தின் இலக்கு இன்னும் பூர்த்தியாக வில்லை. இன்னும் ஏழு நீர்நிலைகளுக்கு, தண்ணீர் சென்றடையவில்லை. இதனால், நீர்வளத்துறை அதி காரிகள் திணறி வருகின்றனர். இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீர்வளத்துறை ஏரிகள் மட்டு மின்றி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறைகளின் நீர் நிலைகளுக்கும், இந்த திட்டத்தின் கீழ், நீர் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடையில் உள்ள பகுதிகளுக்கு, சிறிய அளவிலான குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஆங்காங்கே அடைப்பு மற்றும் உடைப்பு ஏற்பட்டுள்ளதை, கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் ஏழு நீர்நிலைகள் எஞ்சியுள்ளன. அவற்றை நிரப்புவதற்கான, இறுதி கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காளிங்கராயன் அணை நிரம்பி வழிவதால், போதுமான நீர் உள்ளது. எனவே, திட்ட இலக்கை, விரைவில் அடைந்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை