உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறியதால் கனவு நனவானது! மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறியதால் கனவு நனவானது! மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

சூலுார் : அத்திக்கடவு-அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் தண்ணீர் வருவதால், சூலுார், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொங்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என, 60 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். திட்டத்தை செயல்படுத்த கோரி, 1957ம் ஆண்டு முதல், பல வகையான போராட்டங்கள் நடந்தன. கடந்த, 2019 அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. ஆட்சி மாற்றத்துக்குப்பின், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சோதனை ஓட்ட பணிகள் நடந்து முடிந்தன. கடந்த, ஆக., 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நீர் நிலைகளுக்கு தண்ணீர்

பவானி ஆற்றின் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து ஆண்டுக்கு, 1.50 டி.எம்.சி., உபரி நீர், நீரேற்று முறையில், 1,065 கி.மீ., தூரத்துக்கு குழாய்கள் வாயிலாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள, பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் 1,045 ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்பப்படுகிறது. சுமார், 24 ஆயிரத்து, 468 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த தண்ணீர் வாயிலாக பாசனம் பெறும்.

கனவு பலித்தது

சுமார், 60 ஆண்டு கால கனவு பலித்துள்ளதால், போராட்ட குழுவினரும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சூலுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:கொங்கு மண்டல விவசாயிகளின், 60 ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சூலுார், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் வட்டாரங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு, அத்திக்கடவு நீர் வந்து கொண்டுள்ளதை பார்க்கும் போது, உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. கிணறுகள், போர்வெல்களில் உள்ள ஊற்றுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களில் இது மேலும் அதிகரிக்கும். 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அரசு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதை வெற்றி கரமாகவும், முறையாகவும் செயல்படுத்த அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியமாகும். தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் கிடைக்கிறதா என, விவசாயிகள் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பு குழு

நிலத்தடி நீர் விவசாயத்துக்கு மட்டுமல்ல; குடிநீர் ஆதாரத்துக்கும் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல், ஒருங்கிணைப்பு குழு அமைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திட்டத்துக்காக பொருத்தப்பட்டுள்ள வால்வுகள், மோட்டார்கள், குழாய்கள் ஆகியவற்றை குழு மூலம் பராமரிக்கவும், பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக, வாட்ஸ் ஆப் குழுக்கள் துவக்கி, விவசாயிகள், பொதுமக்களை பகுதி வாரியாக இணைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !