கடனை திருப்பிக் கேட்டவர்கள் மீது தாக்குதல்; உறவினர் மீது வழக்கு
கோவை: கடனை திருப்பிக் கேட்ட அக்கா, தம்பியை தாக்கிய உறவினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, கெம்பட்டி காலனி, பாளையத்தோட்டத்தை சேர்ந்தவர் திவாகர், 30; பேக்கரியில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் கெம்பட்டி காலனி 2வது வீதியை சேர்ந்தவர் கோகுல், 27. இவர் சுய உதவி குழு மூலம் திவாகரின் தாயார், அக்கா பெயரில் மொத்தம், ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். கடன் தவணையை முறையாக திருப்பி செலுத்தாததால், சுய உதவி குழுவினர் திவாகர் குடும்பத்தினரிடம் கேட்டு வந்தனர்.கோகுலை சந்தித்த திவாகர், கடன் பணத்தை கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோகுல், திவாகரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். திவாகரின் அக்கா சந்திரா, தடுக்க வந்தார். கோகுல் அவரையும் கீழே தள்ளி தாக்கினார்.காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரியகடை வீதி போலீசார் கோகுல் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.