போலீஸ் அடையாள அட்டை காண்பித்து திருட்டு முயற்சி
கோவை: போலீஸ் அடையாள அட்டையை காட்டி, வீட்டில் திருட முயற்சித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை வடவள்ளி கஸ்துாரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 40. கடந்த 12ம் தேதி மாலை வீட்டில் இருந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க இருவர் வந்தனர். அவர்கள் தங்கள் பெயர்களை கூறி, போலீஸ் எனத் தெரிவித்தனர். அடையாள அட்டையை கேட்டதற்கு காண்பித்த அவர்கள், வங்கியில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு அழைத்தனர். செந்தில்குமார் வீட்டினுள் உடைமாற்ற சென்றார். பின்தொடர்ந்து சென்ற அந்நபர்கள், கழுத்தை பிடித்து வாயை பொத்தியுள்ளனர். தப்பிய செந்தில்குமார், மற்றொரு அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, இருவரும் மாயமாகியிருந்தனர். வடவள்ளி போலீசாரிடம் செந்தில்குமார் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர். மர்ம நபர்கள் காண்பித்தது, போலி அடையாள அட்டை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் போலீசார் தொடர்ந்து விசா ரிக்கின்றனர்.